வார்னர், ஸ்மித் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதியில்லை: ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்காக தங்கள் அணியின் சீனியர் வீரர்கள் கூட்டு சேர்ந்து பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார்.
நாட்டின் கவுரவத்துக்கு ஸ்டீவன் சுமித் சகாக்கள் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் வரிந்து கட்டின. அதிர்ச்சிக்குள்ளான ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் ஒராண்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பான்கிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளிலும் வார்னர் ஸ்மித் விளையாட அனுமதியில்லை என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் பதிலாக வேறு வீரர்கள் விளையாடுவார்கள் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார். முன்னதாக, பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித், வார்னர் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதாராபாத் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து இருவரும் கழற்றி விடப்பட்டனர் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

Comments
Post a Comment